Friday, October 21, 2011

வாழ்வின் அனுபவம்


பள்ளிப் பருவத்தில்
சிட்டுக்குருவியாய்
சிறகடித்து வாழ்ந்து விட்டேன்!

பல்கலை வளாகத்தில்
பகிடிவதைகளோடும்
சிலகாலம் வாழ்ந்துவிட்டேன்!

பெற்றவர் பாசத்தோடும்
பெரியவர் நேசத்தோடும்
பலகாலம் வாழ்ந்து விட்டேன்!

வெற்றியின் வாசலுக்கு
படிக்கற்கள் அமைத்துவிட்ட
பாசங்களையும் பார்த்து விட்டேன்!

கல்வியின் சிறப்போடும்
பதவியின் புகழோடும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

தோளோடு தோள் கொடுத்து
தூக்கி நிறுத்தி பார்க்கின்ற
உறவுகளையும் கண்டு விட்டேன்!

நண்பர்கள் கூடி நின்று
நயமாக பேசியும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

உறவுகளின் உள்ளத்தால்
உதாசீனம் செய்யப்பட்டும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

காதலின் உணர்வோடு
காதலன் கைபற்றி
சிலகாலம் வாழ்ந்துவிட்டேன்!

காதலின் வெற்றியால்
கணவனின் துணையோடு
சில காலம் வாழ்ந்து விட்டேன்!

மட்டில்லா மகிழ்ச்சியில்
மனதுக்கு பிடித்த உறவுகளுடன்
துள்ளி மகிழ்ந்து பார்த்து விட்டேன்!

சொல்லொனா துயரத்தில்
விம்மி விசும்பி அழுது
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

நினைத்தாலே இனிக்கும்
நீளமான நினைவுகளுடன்
நெடுங்காலம் வாழ்ந்துவிட்டேன்!

நினைத்தாலே கசக்கும்
நினைவுகளையும் சுமந்து
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

நினைக்க நினைக்க
நிம்மதி தரும் நினைவோடும்
நீண்டகாலம் வாழ்ந்து விட்டேன்!

நினைத்துப் பார்த்தாலே
நீர் மல்கும் விழிகளோடும்
சிலகாலம் வாழ்ந்து விட்டேன்!

வாழ்க்கை சக்கரத்தில்
வசந்தம் முதல் வாட்டம் வரை
வாழ்ந்து நான் பார்த்து விட்டேன்!

இந்த நொடி என்றாலும்
இறப்பு வந்து அழைத்து நின்றால்
இனிதாக சென்று விடுவேன்!

1 comment:

  1. நன்றி நண்பர் suryajeeva உங்களின் வருகைக்கும் புத்துணர்வூட்டும் கருத்துக்கும்.

    ReplyDelete