Friday, June 24, 2011

என் உறவோடு இருப்பவளே!

உன்னோடு பேசாத
ஒவ்வொரு நிமிடங்களும்
உயிரை கொல்லும்
நொடிகளாய் எனக்கு!

என் ஒவ்வொரு அசைவின்
ஒட்டுமொத்த செயல்களும்
உன் மூச்சினில் தானே
ஒருமித்து வாழ்கிறது!

நான் தொட்டிடும் அனைத்தும்
உன் பெயரை சொல்லி
உத்தரவு கேட்கிறது
உயிரையும் கொல்கிறது!

உனை விலகி என்னால்
ஒரு செயலும் இங்கு
முடியவில்லை அன்பே
உயிரோடு கலந்து
என் உறவோடு இருப்பவளே!

Wednesday, June 22, 2011

ஏது தான் உறவுகள்?

என் கேள்விக்குறியான
எதிர்காலத்தினை நினைத்து
என்றும் நான்
சஞ்சலப்பட்டதில்லை!
என் நெஞ்சோடு நீ என்றும்
ஒன்றாகி இருந்ததால்!

இன்று நீயே என்னை
எடுத்தெறிந்து போய்விட்டால்
எனக்கென்று இங்கு
ஏது தான் உறவுகள்?
உயிருள்ளவரை காத்திருப்பேன்
என் உற்ற நட்பே உனக்காக!

Sunday, June 19, 2011

நிர்க்கதியான வாழ்க்கையில்!

அன்போடு இங்கு
ஆகுதி பண்ணி
அடுத்தவர் மலைத்திட
ஆனந்த வாழ்க்கையில்
ஐக்கியமாய் வாழ்ந்திட்ட
ஓர் தாய் பெற்றெடுத்த
ஓப்பற்ற செல்வங்கள் நாம்!

ஆயிரம் கதை சொல்லி
அற்புதமான கற்பனைகளுடன்
அளவான வருமானத்தில்
அதிஷ்ட லக்சுமிகளாய்
ஆயுளுக்கும் வாழ்ந்திட
ஆசைதனை வளர்த்திட்ட
அழகிய வம்சம் நாம்!

காலத்தின் கோலத்தால்
போர் என்ற கோரத்தால்
பேரிடிகள் பல ஏற்று
பேதலித்து நிலை குலைந்து
சொத்துகள் பல இழந்து
சோகங்கள்தனை சுமந்த
திக்கற்ற உள்ளங்கள் நாம்!

உள்நாட்டு மண்ணிலே
உடுத்த உடையேதுமின்றி
உணவிற்கும் வழியின்றி
உறவுகள் யாருமின்றி
உயிர்ச்சேதம் பல பார்த்து
ஊமையாய் அழுதிட்ட
நாட்களை எண்ணுகிறோம்!

கூட்டுக் குடும்பத்தின்
கூரையை பதம் பார்த்த
குண்டு மழையிலே
குருதியில் நனைந்த எம்
குடும்பத்தின் உறவுகளை
ஒரு கணப் பொழுதினிலே
இழந்திட்ட உறவுகள் நாம்!

பௌர்ணமி நேரத்தில்
பகிர்ந்துண்ட கூட்டாஞ்சோறு
இன்னும் எம் நினைவில்!
நிஜமாய் இருந்த எம்
நிகரற்ற உறவுகளை
நிரந்தரமாய் இழந்த எம்
நிர்க்கதியான வாழ்க்கையில்!

Friday, June 17, 2011

மகிழ்ச்சி பூக்கள்

வாழ்க்கை என்ற நந்தவனத்தில்
வாழுகின்ற காலத்தில்
பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள்
மகிழ்ச்சி என்ற பூக்களே!

கவலை என்ற வெயில் பட்ட
காலமதில் வாடினாலும்
மகிழ்ச்சி என்ற மழைத் துளியால்
மறுபடியும் உயிர் பெறும்

சுற்றுகின்ற சக்கரமாய்

சுழலுகின்ற வாழ்க்கையிலே
பூக்கின்ற பூக்களுக்கும்
சோதனைகள் பல்லாயிரம்

பூக்கள் என்று பிறந்துவிட்டால்

மகிழ்ச்சி என்ன சோகம் என்ன
மாறிமாறி வந்தாலும்
ஆயுள் காலம் அற்பமே!

வாழுகின்ற வாழ்க்கையில்

மகிழ்ச்சிகளால் மலர்ந்திடாது
சோகத்தால் துவள்ந்திடாது
நடுநிலையாய் இருந்து விடு
வாழ்க்கை என்றும் பசுமையாய்
பரந்து கிடக்கும் உன் பாதங்களில்!

Wednesday, June 15, 2011

அழியாத கோலமாய்

அன்பாக எனையணைத்து
ஆருயிர் நட்பாக
அடைக்கலம் தந்தமையால்
அன்பே நீ இங்கு
அழியாத கோலமாய்
என் அடி நெஞ்சின் ஆழத்தில்!

ஆயுளுக்கும் உன் முகம்
அடி நெஞ்சில் பதிந்தமையால்
அநாதை என்ற நிலை
ஆயுளுக்கும் எனக்கில்லை
என் மரணம் கூட
அன்பே உன் நினைவுகளோடு!

Monday, June 13, 2011

புலம்பெயர் உறவென

அந்நிய நாட்டினிலே
ஆர்ப்பரித்து வாழும்
இனிய தமிழிவள்!

ஈன்றவள் நிலை தெரியா
உயிருக்குள் உருகும்
ஊமை மகளிவள்!

என் உற்ற உறவுகளை
ஏராளம் பறிகொடுத்த
ஐயகோ பேதையிவள்!

ஒரு கூட்டுப் பறவைகளாய்
ஓர் அன்னை மடியினிலே
பகிர்ந்துண்ட பறவைகள் நாம்!

கண்ணிமைக்கும் நேரத்தில்
காவு கொண்ட உயிர்களின்
கண்ணான சோதரி நான்!

பள்ளி சென்ற பிள்ளை
பாதியிலே பலியானவளின்
பாசமிகு சிற்றன்னை நான்!

பரம்பரை வளர என
பையன்கள் யாருமற்ற
பாவப்பட்ட மங்கை நான்!

பெற்றவர் உட்பட
மற்றவரையும் தொலைத்து நிற்கும்
உறவேதுமற்ற அநாதை நான்!

அந்நிய நாட்டினிலே
அடைக்கலம் புகுந்ததால்
உயிரற்ற உடலாய் நான்!

உறவுகளை தொலைத்த சோகம்
உள்ளுக்குள் இருந்தாலும்
வெளியுலகில் நான்
புலம்பெயர் உறவென!

Sunday, June 12, 2011

பொறுமையிழந்து

நட்பாக பழகும் எதுவும் - இங்கு
மனிதர்களுக்கு பிடிப்பதில்லை
கரையுடன் நட்பு பாராட்டும்
கடலின் அலையை
மனிதர்கள் அனுமதிப்பதில்லை
கடலரிப்பு என்று காரணம் கூறி
கற்கள் போட்டு தடுக்கிறார்கள்
கடல் வளம் காக்கின்றோம் என
காரணங்கள் பல வேறு
இதனால் தான் இங்கு தன்
பொறுமையிழந்த அலை
சுனாமி என்ற தந்துவேறெடுத்து
கரையை முத்தமிட்டு
மனிதர்களை பழிவாங்குகிறது
அது போல தான் நட்பும்

Friday, June 10, 2011

கற்று வந்துள்ளாயா?

அன்பே!
ஆசையாக உன்னிடம்
அழகான கவிதை கேட்க
சற்றும் தயங்காமல்
சட்டென்று சொல்கிறாய்
நீயே என் கவிதை
உனக்கு ஏன் ஒரு
கவிதை என்று!
கலாய்ப்பதுக்கும் இங்கு நீ
கற்று தான் வந்துள்ளாயா?

நட்பின் சுவாரசியம்

தூர இருப்பவர்களுக்கு
வானமும் கடலும்
ஒட்டி உறவாடுவது போல்
பார்வைக்கு தெரியும்
ஆனால்
நெருங்கி சென்றால்
இரண்டினதும் இடைவெளி
வெளிச்சமாய் தெரியும்
அப்படி தான் இங்கு
நட்பின் ஆழமும்
அதில் நட்பாய் இறங்கி
ஆழமாக நடந்தால் தெரியும்
நட்பும் நட்பின் சுவாரசியமும்!

Thursday, June 9, 2011

மாறாதவரம்

மாற்றம் என்ற ஒன்றே
மாறாத இவ்வுலகில் - உன்
மனது மாறியது ஒன்றும்
பெரிய மாற்றமில்லை
ஆனால்
என் மனது மட்டும்
ஏற்க மறுக்கிறது
உரிமையோடு கேட்கும் உன்
உரத்த குரலைத் தான்
உயிராய் எதிர்பார்க்கிறேன்
நீயோ எந்த உறவுமற்ற
அறிவுரையை பரிசளித்தாய்
இருந்தும்
என் மனமாவது
மாறாத வரம் கேக்கிறேன் - அந்த
மரத்து போன இறைவனிடம்!

Wednesday, June 8, 2011

வென்றுவிடுவேன்

அன்போடு அணைத்து
ஆதரவாய் தோள் சாய்த்து
கன்னம் தொடும் கண்ணீரை
கனிவோடு துடைத்துவிடும்
களங்கமில்லா நட்பே!
ஆயுளுக்கும் நீ
அருகில் இருந்தால்
எத்தனை தான் சோகங்கள்
எனை தேடி வந்தாலும்
அத்தனையையும் மறந்து
அகிலத்தையே வென்றுவிடுவேன்
உன் துணையோடு!

Tuesday, June 7, 2011

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பே இல்லாமல்
வருவதற்கு பெயர் தான்
நட்பு என்பார்கள்
ஆனால்
இங்கு நம் நட்பு
நிறைய எதிர்பார்க்கிறதே
தினமும் நாம்
பேசணும் பழகணும்
பாசத்தை பகிரணும் என்று
அப்போ நட்பு கூட
எதிர்பார்ப்பு உள்ளதா?
புரியவில்லை அன்பே!

Saturday, June 4, 2011

கவலைகள்

அன்பே!
கவலைகளை நினைத்து
கவலைப்படுவதை விடுத்து
கவலைகளை மறந்து
கவலையின்றி இருந்து விடு
கவலைகள் கவலையின்றி
கையசைத்து சென்று விடும்

Friday, June 3, 2011

நட்பு முத்தங்கள்

எதிர்பார்த்த ஆசைகள்
எதிர்பார்க்காத நேரத்தில்
எதேர்ச்சையாக அமைந்தால்
ஏற்படும் ஆனந்தத்திற்கு
அளவே இல்லை
எங்கேயோ உனை பார்த்துவிட்ட
எதேச்சையான ஆனந்தத்தில்
எனை பார்க்க மாட்டாய் என
எழுமானமாய் எடுத்த முடிவு
எதிரே உனை பார்க்கையில்
எண்ணற்ற மகிழ்ச்சிகளை
ஏற்படுத்திக் கொடுத்திடும்
என் இனிய நட்பே உனக்காக
என் இதய பூர்வமான
நட்பு முத்தங்கள்

Thursday, June 2, 2011

இத்தனை ஆழமாய்

என் இனிய நட்பே!
நீ படித்து முடிக்க முடியாத
அழகிய புத்தகம் என்று
அறிந்தது தான்!
ஆனால் நீ
இத்தனை ஆழமாய்
இருப்பாய் என
எண்ணியே பார்க்கவில்லை
உன்னை படித்து முடிக்க
இந்த ஜென்மம் இல்லை
ஏழேழு ஜென்மங்களும்
எனக்கு போதாது

Wednesday, June 1, 2011

கண்டுகொண்டேன்

நட்பு என்பது
நல்லதும் கெட்டதும்
நகைச்சுவையாய் கதைப்பதென
இத்தனை நாள்
நினைத்திருந்தேன்
ஆனால்
நட்பினால் கூட
நகைச்சுவை புரியாமல்
கோவங்களை கூட
சாதிக்க முடியுமென
இன்று தான் உன்னால்
கண்டுகொண்டேன்