Thursday, September 29, 2011

யாருமின்றி


அந்த ஒற்றை பனைமரம்
அருகில் யாரின்
துணையுமின்றி
மெல்லிய காற்றின்
நட்பான துணையோடு...!
தன்னை சுற்றி ரீங்காரமிடும்
அந்த சிறு பூச்சிகளின்
ஓசையை ரசித்தபடி!

Wednesday, September 28, 2011

அந்த ஒரு நொடி



பழகிய பலருக்குள்
புரிந்த சில உறவுகளின்
உண்மையான அன்பும்
எதிர்பார்த்த பாசமும்
உயிரான புரிந்துணர்வும்
ஒரு நொடி பொய்த்தாலும்
பல நாட்கள் இங்கே
பார்த்து பார்த்து பழகிய
அத்தனை இன்பமும்
அந்த நொடிப் பொழுதினிலே
கை தவறி வீழ்ந்து விட்ட
கண்ணாடிக் குவளை போல
துகழ்களாய் நொருங்கிவிடும்.

Tuesday, September 27, 2011

எப்படி புரிய வைப்பேன்



உன்னை பார்க்க மறுக்கும்
கண்களுக்கும்
உன்னோடு பேச மறுக்கும்
உதடுகளுக்கும்
உன்னை தேட மறுக்கும்
இதயத்துக்கும்
உன்னை தீண்ட மறுக்கும்
ஸ்பரிசங்களுக்கும்
எப்படி புரிய வைப்பேன்
நீ தான் என் வாழ்க்கை என்று!

Sunday, September 25, 2011

முயற்சிக்கவில்லை

விடை தெரியா வினாவாக
ஆயிரம் கேள்விகள்
விடைபெற நினைக்கையில்
விழிகளில் சங்கடம்
பிரிவுகளை எண்ணி
பிழிகிறது மனது
மௌனங்களை இங்கு
மொழி பெயர்க்க ஆசை
இருந்தும் முயற்சிக்கவில்லை
சோகத்தின் வாசலை
மொழிபெயர்த்து அறிவதில்
ஏன் தான் ஆர்வம் என!

Thursday, September 22, 2011

காதலின் காத்திருப்பு


பனி விழும் மலைச்சாரல்
பட்டுத் தெறிக்கும் மழைத்துளி
சில்லென்ற பரந்த வெளி
சிலிக்க வைக்கும் கூதல் காற்று
சிற்றிடையாளின் காத்திருப்பு
சிறிதான ஏக்கத்துடன்!

குளிர்சாதன பெட்டியிலிருந்து
சற்று முன் எடுத்து வைத்த
தண்ணீர் போத்தலை போல்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
மாதவளின் வதனமெங்கும்
மெல்லவே துளிர்த்தது!

இத்தனைக்கும் காரணம்
இனியவனின் வருகைக்கான
இதமான காத்திருப்பு
இருந்தும் இதயமெங்கும்
இனம் புரியா தவிப்பு
இடையிடையே இருப்பது தான்

அடிக்கடி அவள் பர்வை
கடிகாரத்தின் முட்களை
ஆதங்கமாய் நோட்டமிட
காத்திருப்பு தொடர்ந்தது
காதலன் வருகைக்காய்
நிமிடங்களை எண்ணியபடி
சற்றே கோவத்துடன்!

இடையினை தழுவிய
இதமான அணைப்பினால்
இலாவாக திரும்பியவளை
இனிக்கும் முத்தங்களால்
தாமத்தின் காரணத்தை
மௌனமாக பகிர்ந்து நின்றான்!

எத்தனை தான் ஊடல் அங்கு
எட்டி நின்று பார்த்தாலும்
இனியவனின் அணைப்புக்குள்
அத்தனையும் அங்கிருந்து
கதிரவனை கண்ட
பனிதுளி போல
காற்றாக பறந்தது
காதலுக்கு மட்டும் தான்
கண்டிப்பாய் இது சாத்தியம்!

Tuesday, September 20, 2011

வளர்ச்சி வேகம்



இனிய உறவே!
உன் நினைவின்
வளர்ச்சி வீதம்
பங்கு சந்தையை விட
வேகமாக அதிகரித்து செல்கிறது
இருந்தும் நீ
அருகிருக்கும் தூரம்
பணத்தின் இன்றைய
அன்னிய செலாவணி
வீத்த்தினைப் போல்
குறைடைந்து வருகிறது.
நம் உறவுக்குள்ளும்
ஆரம்பித்து விட்டதா
ஏற்ற இறக்கமான
தூர இடைவெளிகள்?

நியாயமா?


அன்பே!
உனக்குள் நான் இருப்பதாய்
உண்மையில் நீ கூறுவது
இன்று தான் தெரிந்தது
என்னை நனையாமல் காக்க
உனக்கு குடை பிடித்த போது!
இருந்தும் நீ நனைகிறாயே
எனக்குள் இருந்து
பயப்படாதே என் உறவே
உனக்கு காய்ச்சல் வந்தால்
நான் மருந்து போடுகிறேன்!

Monday, September 19, 2011

புரியாத புதிர்


அன்புத் தோழியே!
கை கோர்த்து கவி பாடி
கண்ணாலே கதை பேசி
மௌனங்களையே மொழிபெயர்த்து
மகிழ்ந்து நாம் இருக்கையில்
மனங்களை நொருக்கிட
நமக்குள் வரவிருக்கும்
நீண்ட பிரிவை எண்ணி
நித்தமும் மனமுடைந்து நம்
நிமிடங்கள் கரைகிறது!
புரிந்திட முடியாத ஓர்
புதிராக உள்ளது நம் நிலை!

Saturday, September 17, 2011

நினைவெல்லாம் நீயாக!


நான் விலகி விட நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்
விரும்பியே வந்து உன்
நினைவுகளால் வாட்டுகிறாய்!

நினைவுகளை எண்ணி
நினைவிழந்து நிற்கையில்
நிஜமாகவே வந்து என்னை
நின் மடியினில் சாய்க்கிறாய்!

நினைவாக்கி கொள்ளவா?
நிஜமாக்கி வாழவா?
நினைவிழந்து நிற்கிறேன்
நினைவெல்லாம் நீயாக!

Friday, September 16, 2011

என் மனதை போல்

பாலைவனம் போன்ற அந்த
பரந்து விரிந்த சமவெளி
என் மனதை போன்றே
சலனங்கள் ஏதுமற்று!
இடையிடையே நிமிர்ந்து நிற்கும்
அந்த ஒற்றை மரங்கள்
மெல்லிய காற்றுக்கு
மெதுவாக தலையசைத்த படி
சோகமே முகவரியான
என் மனமெனும் தோட்டத்தில்
இடையிடையே எட்டிப் பார்க்கும்
பசுமையான என்
பழைய நினைவுகள் போல்!

Saturday, September 10, 2011

செப்ரெம்பர் 11



இரட்டை சகோதரராய்

கைகோர்த்து கதை பேசி

இறுமாப்புடன் நின்று

ஆயிரம் உறவுகளை

அன்போடு எம்மில் தாங்கி

களிப்புடன் இருந்த நம்மை

காலனவன் வந்து

நொடி கூட இரக்கமின்றி

நொருக்கி விட்டு சென்று விட்டான்



நாம் உலகை விட்டு

தொலைதூரம் பிரிந்து சென்று

இன்றோடு முழுமையாக

பத்தான்று பறந்தாலும்

எம்மை நினைவு கூற என

எத்தனையோ உள்ளங்கள்

இன்றும் இவ்வுலகில்

வாழ்ந்து கொண்டு உள்ளன.


உலகையே உலுக்கி நிற்கும்

எம் இருவரின் அழிவும்

மூவாயிரத்திற்கும் மேலான

மனிதர்களின் இறப்பும் கூட

தீவிரவாதத்தை அழிக்கவில்லை

நம் அழிவில் கூட இந்த

நானிலம் திருந்த வில்லை

எம் அழிவுக்கு அரசு இட்ட பெயர்

செப்ரெம்பர் 11 தாக்குதல் என

செத்தும் வாழ்கிறோம் பலர் மனங்களில்



எம்முள் வாழ்ந்த காரணத்தால்

எம்மோடு சேர்ந்திங்கு

எமனால் குடிக்கப்பட்ட

அத்தனை உறவுகளின்

ஆன்மா சாந்தியடைந்து

அமைதி பெற அந்த

ஆண்டவனை வேண்டுகிறோம்

இனியாவது இவ் உலகில்

தீவிரவாதம் ஒழிந்திட

பிரார்த்திப்போம்!

Sunday, September 4, 2011

விட்டில் பூச்சியாய்


விட்டில் பூச்சியாய் நீ
விளக்கொளியாய் நான்
வெளிச்சம் தேடி வந்த நீ
என் வெம்மையில் கருகுகிறாய்!
உன் சிறகுகள்
கருகபடுவதை பார்த்தும்
என் வெம்மை தணியவில்லை
இன்று ஒளி மட்டும் எனக்கு
முக்கியமாகிவிட்டதா?
எனக்கே புரியவில்லை
ஏன் உன்னை இங்கு
காயங்கள் செய்கிறேன் என