Monday, June 13, 2011

புலம்பெயர் உறவென

அந்நிய நாட்டினிலே
ஆர்ப்பரித்து வாழும்
இனிய தமிழிவள்!

ஈன்றவள் நிலை தெரியா
உயிருக்குள் உருகும்
ஊமை மகளிவள்!

என் உற்ற உறவுகளை
ஏராளம் பறிகொடுத்த
ஐயகோ பேதையிவள்!

ஒரு கூட்டுப் பறவைகளாய்
ஓர் அன்னை மடியினிலே
பகிர்ந்துண்ட பறவைகள் நாம்!

கண்ணிமைக்கும் நேரத்தில்
காவு கொண்ட உயிர்களின்
கண்ணான சோதரி நான்!

பள்ளி சென்ற பிள்ளை
பாதியிலே பலியானவளின்
பாசமிகு சிற்றன்னை நான்!

பரம்பரை வளர என
பையன்கள் யாருமற்ற
பாவப்பட்ட மங்கை நான்!

பெற்றவர் உட்பட
மற்றவரையும் தொலைத்து நிற்கும்
உறவேதுமற்ற அநாதை நான்!

அந்நிய நாட்டினிலே
அடைக்கலம் புகுந்ததால்
உயிரற்ற உடலாய் நான்!

உறவுகளை தொலைத்த சோகம்
உள்ளுக்குள் இருந்தாலும்
வெளியுலகில் நான்
புலம்பெயர் உறவென!

1 comment:

  1. நன்றி பிரஷா அக்கா. உங்கள் அனுபவமும் கூடவா?

    ReplyDelete