Thursday, July 21, 2011

ஓர் தொலைபேசி இதயம் பேசுகிறது


என்னை அதிகமாக நேசிக்கும்
என் இனிய உறவுக்கு ஓர்
அனுதாப மடல்
எனக்காக ஒரு நிமிடம்
செவி சாய்ப்பாய் என்ற
எள் அளவு நம்பிக்கையில்!

என்னை என்றும் நீ
அன்போடு அணைக்கிறாய்
ஆசையாய் பார்க்கிறாய்
மகிழ்ச்சி வந்தால்
முத்த மழை பொழிகிறாய்
சோகத்தின் போது
ஏக்கமாய் சாய்கிறாய்
கோவம் வந்தாலோ
இரக்கமின்றி எறிகிறாய்!

உன் செல்ல சிணுங்கல்களை
கேட்டு சிரித்துள்ளேன்
உன் கொஞ்சல் மொழியிலே
உலகையே மறந்துள்ளேன்
உன் இனியவனின் முத்தத்தால்
வெட்கி சிலிர்த்துள்ளேன்
உன் கண்ணீரில் நனைந்து
சிரிப்பலைகளில் காய்ந்துள்ளேன்!

தினமும் உன் விரல்களால்
என்னுடலை தீண்டுகிறாய்
செல்லமாய் நீ தீண்டினால்
தித்திக்குது என் மனது
சற்றே நீ கோவமானால்
வலிக்கிறது என் பொன் மேனி
இருந்தும் உன் விரல்கள்
என்னுடலை நசுக்கிறது!


உன் நட்போடு நீ போடும்
நயமான சண்டைகள்
கிண்டலடித்து கிசுகிசுக்கும்
எண்ணற்ற இரகசியங்கள்
எல்லாமே என்னுள்ளே
எதிரொலித்து கிடக்கிறது
உன்னோடு சேர்ந்து நான் பல
உள்ளங்களை அறிந்து விட்டேன்!

பேச்சினிலே ஒருவர் பற்றி
வரலாறே கூறிடுவேன்
குரல்களின் மாற்றத்தால்
குணங்களையும் சொல்லிடுவேன்
உன் மனதை மட்டுமல்ல
உன் அன்பானவர் மனங்களையும்
ஓர் நொடியில் அறிந்துவிடும்
பக்குவமும் எனக்குண்டு.

உன்னையும் - உன்
உள்ளத்து உறவுகளையும்
புரிந்து பழகியதால்
உரிமையுடன் உன்னிடம்
கோரிக்கை இடுகிறேன்
உன் உற்ற உறவுகளுடன்
ஒரு போதும் இரவினிலே
சண்டை செய்து விடாதே!

நீ போடும் சிறு சண்டையால்
தூக்கம் கெட்டு போவது
உனக்கு மட்டுமல்ல
உன்னோடு சேர்ந்த எனக்கும் தான்!
உன் சமாதான பேச்சிற்காய்
உன்னோடு சேர்ந்திங்கு
இரவிரவாய் விழிப்பது
எத்தனை பெரிய துன்பம்!

உன்னால் என் தூக்கம்
பல இரவுகள் கெட்டுள்ளது
அன்பே இரைஞ்சிக் கேட்கிறேன்
எனக்கு நீ கொடுக்கும்
உணவோடு மட்டுமல்ல
இரவினிலாவது நான்
நிம்மதியாய் தூங்கிட
இடைவேளை தந்துவிடு!

2 comments: